வியாழன், 23 அக்டோபர், 2008

‘ஒளியொன்றுகை’

வணக்கம் நண்பர்களே, 21.10.2008 இரவு 8 மணிக்குத் தொடங்கி 10.50 வரை மிகவும் சிறப்பான முறையில் ‘ஒளியொன்றுகை’ எனும் தீபாவளி சிறப்புக் கலை இரவு எங்கள் கல்லூரியில் நடந்தேறியது. இந்நிகழ்வில் ஜொகூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் கண்காணிப்பாளர் திரு.நடராஜன் அவர்களும், கல்லூரியின் விரிவுரையாளர்களில் ஒருவரான திரு. ஓமனோரா அவர்களும் அவர்தம் துணைவியாரும் கலந்து சிறப்பித்தனர். மேலும், கல்லூரியின் துணை முதல்வரும் வருகை அளித்திருந்தார்.

தொடக்கம் முதல் இறுதி வரை இந்நிகழ்ச்சி முழுமையாக நம் தாய்தமிழில் நடந்தேறியது. வாசலில் அழகான வண்ணக்கோலம், பயிற்சி ஆசிரியர்களின் மின்னும் ஆடைகள், தீபாவளி வாழ்த்து அட்டைகளால் அலங்கரிக்கப்பட்ட அந்த சின்னஞ்சிறு மண்டபம் பார்ப்பவர்க்கு அன்றுதான் தீபாவளி என்ற எண்ணத்தை உண்டாக்கியது.


வருக!வருக! என்று அனைவரையும் வரவேற்கின்றது தீபக் கோலம்


இந்தியர்கள்
‘இயல், இசை, நாடகம்’ ஆகிய முத்தமிழுக்குச் சளைத்தவர்கள் அல்லர் என்பதை அனைத்துப் பயிற்சி ஆசிரியர்களும் தங்களின் படைப்புகளைச் சிறப்புடன் படைத்தனர். நவீன நடனங்களுக்குக்கிடையே இடம்பெற்ற நம் பாரம்பரிய விளக்கு நடனம் விழிகளுக்கும் மனத்திற்கும் சுவை சேர்த்தது. இடையிடையே ஒளிபரப்பட்ட ஒளிக்கீற்று (slide presentation) மேலும் நிகழ்வை மெருகேற்றியது. 'தீபாவளி பிறந்த கதை' எனும் குறும்படம் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. விழிகளுக்கு மட்டுமின்றி வருகை தந்த அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.


மிகவும் நேர்த்தியாகவும் சற்றும் பிசராமல் நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களுக்கு ஒரு சபாஷ்! தொடர்ந்து பல அரிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வெற்றி காண வாழ்த்துக்கள்! திரு நடராஜன் அவர்கள் தமது உரையில் “பயிற்சி ஆசிரியர்கள் அனைத்துக் கலைகளையும் கற்றறிய வேண்டும். அதோடு, சமுதாயத்திற்கு நலம் பயக்கும் நிகழ்வுகளை ஏற்பாடுச் செய்தும் கலந்தும் சிறப்புச் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.


ஆக, தொடர்ந்து நம் சமயம் மற்றும் மொழி தொடர்பான நிகழ்வுகள் நடத்தப்படும் என எதிர்பார்க்கிறேன்.


நாம் வளர, நம் கலை, கலாசாரம், பண்பாடு, மொழி என்றும் வாழ்க!


அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்


என்றென்றும் அன்புடன்,
மலர்விழி சுப்ரமணியம்


4 கருத்துகள்:

Sathis Kumar சொன்னது…

இந்நிகழ்வை நெகிழ்வட்டில் பதிவு செய்து வைத்திருந்தால் தயவு செய்து யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யவும். கண்டுகளிக்க ஆவலாக உள்ளேன். இது வெறும் பரிந்துரையே. மற்றபடி "ஒளியொன்றுகை" நிகழ்வை வெற்றிகரமாக நடத்திய தெமெங்கோங் ஆசிரியர் பயிற்சி கழக தமிழ் மாணவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

//இந்தியர்கள் நாங்கள் ‘இயல், இசை, நாடகம்’ ஆகியவற்றிற்குச் சளைத்தவர்கள் இல்லையென அனைத்து பயிற்சி ஆசிரியர்களும் தங்களின் படைப்புகளைப் படைத்தனர்.//

மலர்விழி அவர்களே, இந்தியர்களுக்கு இயல், இசை, நாடகம் என்று எதுவும் கிடையாது.

இயல், இசை, நாடகம் என்பது தமிழர்களுக்கே உரிய தனிச்சிறப்பு. மொழியை இப்படி மூன்று கூறாகப் பகுத்து; தொகுத்து வளர்த்தவர்கள் உலகிலேயே தமிழர்களாகத்தான் இருக்க முடியும்.

இந்தியர் என்பதற்கும் தமிழர் என்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு!

என்ன செய்வது! வரலாற்றுத் தெளிவும் தொலைநோக்கும் இல்லாத தமிழர்கள் தங்களை இந்தியர் என சொல்லியும் நம்பியும் வருகின்றனர்.

தமிழர் என சொல்லிக்கொள்வதில் பிறப்புரிமை உள்ளது. அதுவொரு விடுதலை உணர்வும் கூட!

இந்தியர் என சொல்லிக்கொள்வதில் அறியாமை உள்ளது. அதுவொரு அடிமை உணர்வும் கூட!

ஆசிரியராக வளரும் தங்களைப் போன்றோர் வளரும்போதே தெளிவோடு வளர்வதே நமது மொழிக்கும் இனத்திற்கும் நல்லது.

ஆகவே, தயவுகூர்ந்து தெளிவைத் தேடுங்கள்! விடுதலை உணர்வைப் பெறுங்கள்! என அன்போடு விழைகிறேன்.

தமிழ் பெயரில்லா தமிழன்(SATEES) சொன்னது…

ஈழத்தமிழ் மக்கள் படுகொலைக்கு எதிராக கண்டனப் பொதுக்கூட்டம்.
கடந்த 22-10-2008 அன்று,சை லேங் பார்க்,பிறையில் உள்ள ஜசெக பணிமனையில் வடக்கு மாநிலங்களை சேர்ந்த தமிழ்,தமிழர் சார்ந்த அமைப்புகளின் பிரதிநிதிகளோடு நடத்தப்பட்ட சந்திப்பிற்கு பிறகு வெளியிடப்பட்ட அறிக்கை கீழ் வருமாறு :-

மிகக்கடுமையாக,கண்மூடித்தனமாக,முப்படைகளையும் கள்மிரக்கி தமிழ் ஈழ மக்களை படுகொலை செய்யும் சிறிலங்கா அரசாங்கத்தையும்,அதற்கு துணைபோகும் இந்திய அரசாங்கத்தையும் எதிர்த்து இந்த கண்டனப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ் மக்களின் வீடுகள்,பள்ளிக்கூடங்கள்,பொது மண்டபங்கள், கோயில்கள்,விளைச்சல் நிலங்கள் என பரந்த நிலையில் குண்டு அழிக்கும் சிறி லங்கா அரசிற்கு பாடம் கற்பிப்போம்.

இந்த படை நடவடிக்கையினால் எல்லாவற்றையும் இழந்து,சாலை ஓரங்களிலும்,மர நிழலிலும்,காய்ந்த வயிற்றோடும்,ஒரு வேளை சோற்றுக்கும் வழியின்றி அடுத்து என்ன நடக்குமோ என்று அஞ்சி, வயது முதிர்ந்த பெரியோரும்,வயிற்றில் கருவை சுமந்த தமிழ் தாய்மார்களும்,பள்ளி மாண்வர்களும் என ஒட்டுமொத்த தமிழ் மக்களும் பேரவலத்தை எதிர்கொண்டு தவிக்கின்றனர்.எனவே நமது தமிழ்ச் சொந்தங்களை காக்க

தமிழ் உணர்வுள்ள அனைவரும் குடும்பத்தோடு வருக!!
தமிழரின் துயர்போக்க அலையென திரண்டு வருக,வருக!!
தமிழரெல்லாம் ஒன்றிணைவோம்,பகைவர்தமை வென்றிடுவொம்!!

நாள் : 01-11-2008 (சனிக்கிழமை)
நேரம் : இரவு 7.30 மணிக்கு மேல்
இடம் : டேவான் சிறி மாரியம்மன்,பட்டவொர்த்.
ஏற்பாடு : வட மாநிலங்களின் தமிழ்,தமிழர் சார்ந்த அமைப்புகள்

இக்கண்,

சத்தீஸ் முணியாண்டி,
ஏற்பாட்டுக்குழு செயலாளர்

( மேல் விவரங்களுக்கு : சத்தீஸ் 016-4384767 / குணாளன் 013-4853128)

*இம்முயற்சிக்கு பெரும் ஆதரவாக இருந்தவர்கள் :-

பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் ப.இராமசாமி
ஜனநாயக செயல் கட்சி
உலக தமிழர் நிவாரண நிதி
மலேசிய தமிழ்நெறி கழகம்
மலேசிய திராவிடர் கழகம்
தமிழ் இளைஞர் மணிமன்றம்
இந்து இளைஞர் இயக்கம்
மக்கள் சக்தி நண்பர்கள்
பட்டவொர்த் மாரியம்மன் ஆலயம்
பினாங்கு இந்து அறப்பணி வாரியம்
மற்றும் பல தமிழ்,தமிழர் சார்ந்த் அமைப்புகள்

பெயரில்லா சொன்னது…

நன்றி சதீஷ் அண்ணா...நிகழ்வைப் பதிவேற்றம் செய்ய முயற்சிக்கிறேன்...

ஐயா திரு சுப.நற்குணனுல்லு நன்றி...தெளிவடைய செய்தீர்! மிக்க நன்றி...திருத்திக்கொள்கிறேன்..