வியாழன், 9 அக்டோபர், 2008

அன்பு


‘அன்பு’ மூன்றே எழுத்துக்களால் ஆனது.ஆனால் இப்பூவலகையே இயக்கி கொண்டிருக்கும் ஒரு அற்புதமான ஆயுதம் என்று சொன்னால் அதை மறுப்பார் இல்லை.நட்பு, அருள்,பக்தி என்பது அன்பிற்க்குச் சொல்லப்படும் வேறு விளக்கங்களாகும்.நாம் அன்பிற்க்குப் பல உதாராணங்கள் கொடுக்கலாம்.ஒரு தாய் தன் குழந்தைப் பால் வைத்திருப்பது அன்பு,ஒரு அண்ணன் தன் தம்பி மீது வைத்திருப்பதும் அன்பு, ஒரு பசு தன் கன்று மீது வைத்திருப்பதும் அன்புதான்.நாம் ஒருவர் மீது வைத்திருக்கும் அன்பானது தெய்வமானதாகவும் உண்மையானதாகவும் இருக்க வேண்டும்.நாம் யார் மீது அன்பு வைத்திருக்கிறோம் என்பது முக்கியமல்ல ஆனால்,நாம் வைத்திருக்கும் அன்பானது எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்ப்பார்க்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.



அன்பானவர்களை நீங்கள் பார்த்ததுண்டா?அனைவரும் அன்பானவர்களையே அதிகம் விரும்புவர்.தம் மனதில் உண்மையான அன்பு கொண்டவர்கள் பண்பாகவும் கனிவாகவும் பேசி’ காந்தம் இரும்பைக் கவர்வது போல’ அனைவரையும் தன் வசம் ஈர்ப்பார்கள்.அன்பானவர்கள் தம் உயிரை காட்டிலும் மற்றவர்களின் உயிர் மீது அதிக அக்கறை வைத்திருப்பர்.சிறு உயிரினங்களுக்கும் ஏதாவது துன்பம் நேரிட்டால் ‘ அனலில் இட்டப் புழுப் போல’ துடிதுடிப்பார்கள்.இவர்கள் மனிதர்களையோ அல்லது மிருகங்களையோ வேறுப்படுத்திப் பார்க்கமாட்டர்கள்.


உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை அனைவரும் அறிந்திருப்பீர்.தாஜ்மகாலை ஷாஜகான் என்பவர் தன் ஆசை மனைவியின் இறப்பிற்க்கு பின்னர் கட்டினார்.இது அவர் தன் மனைவியின் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்று ‘உள்ளங்கை நெல்லிக்கனிப் போல’அனைவருக்கும் தெளிவாக தெரிய வைக்கின்றது.அக்காலத்திலே அன்பிற்க்கு இலக்கணமாக திகழ்ந்துள்ளார் ஷாஜகான். ஆனால், இன்றைய நிலமையை நாம் சற்று பின் நோக்கிப்பார்த்தோமேயானால் அது நமக்குப் பெரிய ஏமாற்றத்தையும் வருத்தத்தையுமே முன் வைக்கின்றது.அக்காலத்து மனிதர்களிடையே முன்னேற்றம் ஏதுமில்லாதப் போதும் அன்பானவர்களாகத் திகழ்ந்தார்கள்.ஆனால், இக்காலங்களில் நாம் அடைந்துள்ள வளர்ச்சிக்கு ஈடுக்கொடுத்து ஒவ்வொரு நாளும் ஆங்காங்கே கொலை,கொள்ளை,கற்பழிப்பு போன்றவை நடந்த வண்ணமாகத்தான் உள்ளது.ஏன் இவர்களின் நெஞ்சங்கள் கல்லால் ஆனாதா?இல்லை இவர்களுக்கு அன்பு என்ற சொல்லுக்கே பொருள் தெரியாதா?


‘அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு.’

இது அன்பைப் பற்றி திருவள்ளுவர் எழுதியுள்ள குறள்களில் ஒன்றாகும்.அன்புக் கொண்டு வாழ்பவர்கள்தான் மனிதர்கள் என்றும், அன்பில்லா மனித வாழ்வு உடம்பில் சதையை கொண்ட வாழ்வாகவே முடிந்து விடும் என்கிறார்.அவ்வாறு வாழ்வது வாழ்க்கையே இல்லை என்கிறார்.இதை நாம் என்னாலுமே கடைப்பிடிக்க வேண்டும்.அன்பு இவ்வுலகில் எதையுமே செய்யக்கூடிய சக்தி வாய்ந்தது.


அன்பு படைத்த மனிதர்கள் தெய்வத்திற்க்குச் சமமாகவும் அன்பில்லா மனிதர்கள் மரக்கட்டைகளுக்குச் சமமாகவும் கருதப் படுவர். அன்பின் பாதையில் செல்கின்றவர்கள் என்றுமே வெற்றி அடைவார்கள். தங்களுக்கென்று துன்பம் நேரிடும்போது அனைவரும் தோள் கொடுத்து உதவுவர். நாம் இவ்வுலகில் விடும் கடைசி மூச்சு வரை அன்பின் ஆழத்தை உணர்ந்து புரிந்து வாழ முயற்ச்சிப்போம்.


அன்பே சிவம்!

ஆக்கம்: ரேகா ராஜு
(தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி)

கருத்துகள் இல்லை: