செவ்வாய், 28 அக்டோபர், 2008

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்



தீபத்திருநாளாம் தீமைகள் ஒழிந்திடுமாம்,
இல்லம் முழுவதும் இன்பம் பொங்கிடுமாம்,
வாசலில் வண்ண கோலம் மின்னிடுமாம்,
மலர்களினூடே மகிழ்ச்சியும் மலர்ந்துடுமாம்,
சினுங்களுடன் சிறுவர்கள் விழித்தெழ,
பட்டுடுத்தி கொண்டாட்டமாய்,
இறையாசியுடன் பெற்றோரின் வாழ்த்துடனும்,
இனிப்புப் பதார்த்தங்களோடு,
இனிதுடனே பிறந்திடுமாம்...
அழகாய் அசைந்தாடும் சுடரொளி
எங்கள் இருள் போக்கும் - தீபாவளி

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்_


என்றென்றும் அன்புடன்,
மலர்விழி சுப்ரமணியம்

திங்கள், 27 அக்டோபர், 2008

தித்திக்கும் தீபத் திருநாள்.


வணக்கம் அன்பர்களே, வைகாசி மாதத்தில் ஒவ்வொரு ஆண்டும் அமாவாசை திதியன்று பூக்கின்றது நமது தித்திக்கும் தீப திருநாள். வருடங்கள் உருண்டோடுகின்றது ஆனால், நமது இந்தியர்களோ இன்றளவும் உருளுகிரார்களே தவிர ஓடாமல் நின்ற இடத்திலேயே நிற்கின்றனர். நான் கூற வருவது என்னவெனில், நாடு சுதந்திரம் அடைந்து ஐம்பத்து ஒன்று வருடம் ஆகி விட்டது. நாம், அதாவது இந்தியர்கள் எவ்வளவோ செலவு செய்கின்றோம், சுய ஆசைகளுக்கு நம்மை அர்ப்பணிக்கின்றோம் , மேலும் தேவை இல்லாத எவ்வளவோ காரியங்களில் ஈடு படுகின்றோம்.

சுதந்திரம் பெற்றால் மட்டும் போதாது; அதனை நல்வழியில் நாம்தான் கையாள வேண்டும். பெரும்பான்மையினர் எதற்குத் தீபத் திருநாளைக் கொண்டாடுகின்றோம் என்று கூட தெரியாமல் இருக்கின்றனர். அப்படி உள்ள பட்சத்தில் தீப திருநாள் தேவை தானா???

தேவை இல்லை என்று நான் கூற முற்படவில்லை மாறாக இனிமேலாவது தீப திருநாளின் அர்த்தம் அறிந்து கொண்டாடுவோமாக என்றுதான் சொல்ல கடமை பட்டுளேன். அன்பர்களே நமக்காக துயர் கொள்ளும் பலரை மனதில் கொண்டு இந்த தீப திருநாளை ஆடம்பரம் இல்லாமல் குறுகிய கால கட்டத்தில் எளிய முறையில் கொண்டாடுவோம்.

அனைத்து இந்திய நல் உள்ளங்களுக்கும் எனது தீபத் திருநாள் நல் வாழ்த்துகள்.

சுடர் விட்டு எரிகின்றது அங்கு தீப ஒளி,
இங்கு படர் விட்டு எரிகின்றது நம் இந்திய ஒளி,
இரு ஒளி ஒரு சேர்ந்து சுடர் தரும் நாளை எண்ணி,
வாழ்கையை நல் முறையில் செலுத்துவோம்....

ஆக்கம்: கீர்த்தி செல்வராஜு
தெமேங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி

வியாழன், 23 அக்டோபர், 2008

‘ஒளியொன்றுகை’

வணக்கம் நண்பர்களே, 21.10.2008 இரவு 8 மணிக்குத் தொடங்கி 10.50 வரை மிகவும் சிறப்பான முறையில் ‘ஒளியொன்றுகை’ எனும் தீபாவளி சிறப்புக் கலை இரவு எங்கள் கல்லூரியில் நடந்தேறியது. இந்நிகழ்வில் ஜொகூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் கண்காணிப்பாளர் திரு.நடராஜன் அவர்களும், கல்லூரியின் விரிவுரையாளர்களில் ஒருவரான திரு. ஓமனோரா அவர்களும் அவர்தம் துணைவியாரும் கலந்து சிறப்பித்தனர். மேலும், கல்லூரியின் துணை முதல்வரும் வருகை அளித்திருந்தார்.

தொடக்கம் முதல் இறுதி வரை இந்நிகழ்ச்சி முழுமையாக நம் தாய்தமிழில் நடந்தேறியது. வாசலில் அழகான வண்ணக்கோலம், பயிற்சி ஆசிரியர்களின் மின்னும் ஆடைகள், தீபாவளி வாழ்த்து அட்டைகளால் அலங்கரிக்கப்பட்ட அந்த சின்னஞ்சிறு மண்டபம் பார்ப்பவர்க்கு அன்றுதான் தீபாவளி என்ற எண்ணத்தை உண்டாக்கியது.


வருக!வருக! என்று அனைவரையும் வரவேற்கின்றது தீபக் கோலம்


இந்தியர்கள்
‘இயல், இசை, நாடகம்’ ஆகிய முத்தமிழுக்குச் சளைத்தவர்கள் அல்லர் என்பதை அனைத்துப் பயிற்சி ஆசிரியர்களும் தங்களின் படைப்புகளைச் சிறப்புடன் படைத்தனர். நவீன நடனங்களுக்குக்கிடையே இடம்பெற்ற நம் பாரம்பரிய விளக்கு நடனம் விழிகளுக்கும் மனத்திற்கும் சுவை சேர்த்தது. இடையிடையே ஒளிபரப்பட்ட ஒளிக்கீற்று (slide presentation) மேலும் நிகழ்வை மெருகேற்றியது. 'தீபாவளி பிறந்த கதை' எனும் குறும்படம் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. விழிகளுக்கு மட்டுமின்றி வருகை தந்த அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.


மிகவும் நேர்த்தியாகவும் சற்றும் பிசராமல் நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களுக்கு ஒரு சபாஷ்! தொடர்ந்து பல அரிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வெற்றி காண வாழ்த்துக்கள்! திரு நடராஜன் அவர்கள் தமது உரையில் “பயிற்சி ஆசிரியர்கள் அனைத்துக் கலைகளையும் கற்றறிய வேண்டும். அதோடு, சமுதாயத்திற்கு நலம் பயக்கும் நிகழ்வுகளை ஏற்பாடுச் செய்தும் கலந்தும் சிறப்புச் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.


ஆக, தொடர்ந்து நம் சமயம் மற்றும் மொழி தொடர்பான நிகழ்வுகள் நடத்தப்படும் என எதிர்பார்க்கிறேன்.


நாம் வளர, நம் கலை, கலாசாரம், பண்பாடு, மொழி என்றும் வாழ்க!


அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்


என்றென்றும் அன்புடன்,
மலர்விழி சுப்ரமணியம்


ஞாயிறு, 19 அக்டோபர், 2008

இந்த நாட்டின் சொந்தக்காரர் யார்?


இந்த அழகான நாட்டிற்குச் சொந்தக்காரர்கள் யார் என்று ஒரு கேள்வி எழுந்து வந்தால், அதற்குப் பதில் ஒரே வார்தையில்தான் அடங்கியுள்ளது. இது நமது நாடு என்று சொல்வதில் ஒவ்வொரு மலேசியக் குடிமகனும் பெருமைப்பட வேண்டும்.

இந்தியர்கள், சீனர்கள், மலாய்க்காரர்கள் என்று பிரித்துப் பார்க்காமல் இது மலேசியர்களின் நாடு என்று பெருமையோடு சொல்பவர்கள் மிகவும் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். மலேசியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் இது எனது நாடு என்ற எண்ணம் மேலோங்க வேண்டும். சற்று உள்நோக்கினால், நமது நாடு மற்ற நாடுகளை விட எவ்வளவோ வித்தியாசமான நாடு என்று சொல்லலாம். வித்தியாசமான பண்பாடு, பல்வேறான கலாசாரங்கள், பலவகையான உணவுகள் போன்ற பல விசயங்களில் நாம் வேறுபட்டுள்ளோம். எது எப்படியாயினும், நான் ஒரு மலேசியன் என்று சொல்ல நானும், நீங்களும், அனைவரும் பெருமைப்பட வேண்டும்.
ஓர் இனத்தின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், மற்ற இனத்திற்குக் கிடைக்கும் உரிமைகள் அனைத்தும் அந்த இனத்திற்கும் சென்று சேர வேண்டும். இன, மதம், போன்ற பிரிவினைகளுக்கு ஒற்றுமை ஒன்றே தீர்வு என்று சொன்னால் அது மிகையாகாது.

சுதந்திரம் பெற்று 51 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், ஒவ்வொரு மலேசியக் குடிமகனும் இந்த நாட்டிற்குச் செய்ய வேண்டியது கடலளவு உண்டு. நாடு நமக்கு என்ன செய்தது என்று கேட்காமல், நாம் நாட்டிற்கு என்ன செய்தோம் என்று நாம் சிந்திப்போம். இது எனது நாடல்ல, உனது நாடும் அல்ல, இது நமது நாடு.

வாழ்க மலேசியா!

ஆக்கம்: கலையமுதன் ரவீந்திரன்
(
தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி)

சனி, 18 அக்டோபர், 2008

"வீராங்கனைப் பாட்டி"

இது லண்டனில் நடந்த ஒரு உண்மை சம்பவம். மூன்று இளைர்கள் ஒரு அறுபத்து எட்டு வயது மூதாட்டியின் பணப்பையை திருடிக்கொண்டு தப்பித்து ஓட முயற்சி செய்தபோது, சம்பந்தப்பட்ட மூதாட்டி அந்த மூன்று இளைர்கள் வேகமாக ஓடி மீண்டும் அந்த மூன்று இளைர்களைப் பிடித்து தனது பணப்பையை மீண்டும் பெற்றுக்கொண்டாராம்.

இது எப்படி சாத்தியம் என்று காவல் துறையினர் விசாரணை செய்த பொழுது,அந்த மூதாட்டி முன்னாள் நீண்ட தூர ஓட்ட போட்டிகளில் மிகவும் பெயர்போனவர் என்று தெரிய வந்துள்ளது.ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அட்டையைப் பார்த்து புத்தகத்தை எடைபோடாதே என்று.அந்த மூன்று இளைர்களும் அந்த பாட்டியின் வயதையும் தப்பாக எடைபோட்டு விட்டார்கள்.

16 ஆம் திகதி அன்று வெளியாக்கப்பட்ட "தி ஸ்டார்" நாளிதழில் இந்த செய்தியை வாசித்தேன். அந்த செய்தியைப் படித்த எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டாலும், பாட்டியின் தைரியத்தை நினைத்து எனக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. இது ஒரு நகைச்சுவை சம்பவமாக இருந்தாலும், இதற்குப் பிறகு லண்டனில் வசிக்கும் இளைர்கள் வயதானவர்களிடம் சற்று கவனமாகத்தான் இருக்க வேண்டும்.

ஆக்கம்: கலையமுதன் ரவீந்திரன்

(
தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி)

வியாழன், 16 அக்டோபர், 2008

அடியேன் எண்ணங்களில் அலைபாய்ந்து கொண்டிருக்கும்,மலேசியாவில் இன்றைய தமிழின் நிலைமை.(அலைகள் மூன்று )

மீண்டும் போகின்றது அடியேனின் எண்ணங்கள், தமிழ் மொழிக்கு சுடர் கொடுக்க ஒற்றுமையோடு உயர்வோம்.. ஆம், இன்றைய சிறு எண்ணம் யாதெனில் மாணவர்களின் பங்காகும். விளக்கமாக கூறின் தமிழை வளர்க்க மாணவர்கள் அளப்பறியாது ஆற்ற வேண்டிய சில கடமைகள் ஆகும்.

முதலாவதாக மாணவர்கள் தமிழ் பள்ளிக்கு செல்வதில் ஆர்வம் செலுத்த வேண்டும். இவ்வார்மானது பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே வளர வேண்டும். பிறந்தது முதலே அவர்களுக்கு தமிழில் பேச பழக கற்று தர வேண்டும். இப்படி செயதொமாயினில் பிள்ளைகளுக்கு தமிழை கற்க சுய ஆர்வம் தோன்றும்.

பின்னர், தமிழைக் கற்று தரப்படும் பாலர் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். பாலர் பள்ளியில் குழந்தைகள் தமிழை ஆர்வமோடு கற்க பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சற்று அதிகமாகவே வியர்வை சிந்த வேண்டும். மாணவர்கள் தமிழை எளிய வகையில் புரிந்துக் கொள்ள கூடிய நிலைமையில் தமிழை போதிக்க வேண்டும்.

மேலும்,வேற்று மொழி புத்தகங்களை தவிர்த்து தமிழ் மொழியில் பிரசுரிக்க பட்ட புத்தகங்களை அதிகம் பயில மாணவர்களை தூண்ட வேண்டும். அதும் மட்டுமா மாணவர்களாகிய நாமும் இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு முழு மூச்சோடு தமிழை கற்றுக் கொள்ள வேண்டும்.

இறுதியாக இடை நிலைப் பள்ளி மாணவர்கள் வயதில் மூத்தவர்கள் என்ற முறையில் மட்டுமல்லாமல் செயலிலும் மூத்தவர்கள் என நிரூபிக்க பி.எம்.ஆர்., எஸ்.பி.எம்., மற்றும் எஸ்.தி.பி.எம், ஆகிய சோதனைகளில் தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி இலக்கிய பாடத்தை கற்றுக் கொள்வதை சுய ஆர்வத்தோடு கட்டாயமாக்கி கொள்ள வேண்டும்.

மீண்டும் அடியேனின் எண்ணங்கள் தொடரும். அலைகள் ஓய்வதில்லை அது போல அடியேனின் எண்ணங்களும் என்றும் ஓய்வதில்லை. மீண்டும் அலைகள் பாயும் வரை அடியேனின் அன்பார்ந்த வாழ்துக்கள், நன்றி.

ஆக்கம்: கீர்த்தி செல்வராஜூ
(தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி)

ஞாயிறு, 12 அக்டோபர், 2008

மலேசிய இந்திய இளைஞனே நீ கண் விழி......


இன்றைய உலகம் மட்டுமே நவ நாகரீகத்திற்கு மாறியுள்ளதே தவிர, நமது மலேசிய இந்திய இளைஞர்கள் இன்றும் அன்று போலவேதான் இருக்கிறார்கள். ஆம் அன்பர்களே உலகம் இந்த சில பல ஆண்டுகளில் எவ்வளவோ மாறுதல்களை கண்டுள்ளது மக்கள் அம்மாருதல்களை புரிகின்றினர். ஆனால், நமது இந்திய இளைஞர்கள் இன்றும் மாறுதல்களை கண்டு வியப்பவர்கலாகவே இருக்கிறார்களே தவிர எந்த ஒரு மாறுதல்களையும் நிகழ்த்த வில்லை.இதற்கான காரணம் என்ன?

அஸ்திவாரம் சரியாக அமைந்தால் தான் ஒரு கட்டிடம் மேலோங்கி முழுமையாக நிற்கும் இல்லையென்றால் அக்கட்டிடம் சில நொடிகளில் கூட சரிந்து விழலாம். அது போலத்தான் இந்திய இளைஞன் ஒருவன் மேலோங்கி நிற்க வயதில் மூத்தவர்கள், இன்னும் அழுத்தமாக சொல்ல சொன்னால் போதுமான தலைமைத்துவம் நிலவ வேண்டும் நம் இந்தியர்களிடையே! வயதில் மூத்தவர்களுக்கு மட்டும் அல்ல மாறாக இளைஞனே உன்னை தான் சொல்கிறேன் தலைமை துவம் உன்னில் தேடு இவ்வுலகம் உன்னை போற்றும்.

ஆனால், தலைமைத்துவம் மட்டும் இருந்தால் போதுமா? இல்லை அத்தோடு இளைஞர்கள் நீங்கள் உங்கள் ஆசையை அதாவது ஆணவம்,கன்மம்,மாயை ஆகிய இம்மூன்றையும் விட்டொழிக்க வேண்டும். ஆசை யாரை விட்டது என்று உங்களுள் தோன்றலாம். ஆம், ஆசையை அகற்ற முடியாது ஆனால் குறைக்கலாம் அல்லவா? சிந்தியுங்கள் இளைஞர்களே! ஆசையை கட்டு படுத்தி நாட்டையும் சரி வீட்டையும் சரி ஏன் எதுவாக இருப்பினும் மேலோங்க செய்ய இந்திய இளைஞன் நாம்தான் பங்காற்ற வேண்டும். நமது போதுமான நேரத்தை போதுமான வகையில் செலவிட பழகிக் கொள்ள வேண்டும். இன்றைய பல இந்திய இளைஞர்கள் போதைப் பொருள் அடிமை, விலை மாதுவுக்கு அடிமை, மற்றும் நண்பர்களிடத்து அடிமை போன்று இன்னும் எத்தனையோ வகையில் சீரழிகின்றனர். சீரழிப்பதை தவிர்க்க இளைஞனே நீ கண் விழி...


மேலும், இன்றைய இந்திய இளைஞனே நமக்கான வாய்ப்பு மிகக் குறுகிய நிலையில் தான் இன்றும் நமது நாட்டில் அமைந்துள்ளது. அதாவது மேல் படிப்பு படிப்பதற்கான வாய்ப்பு, வியாபார ரீதியிலான வாய்ப்பு, அதைத் தவிர்த்து இன்னும் எத்தனையோ வாய்ப்புகளை நமது இளைஞர்கள் தவற விட்டு விடுகின்றனர் அத்தோடு தவற வைக்க விடுகின்றனர். அதாவது ஒன்றாவது போதுமான மதிப்பெண்களை பெற்றிருந்தும் குறிப்பிட்ட சில மேல் படிப்பு மையங்கள் அவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில்லை, மற்றொன்று இளைஞர்கள் தாமாகவே குறைந்த மதிப்பெண்களை பெற்று விட்டு பிறகு மேல் கல்வி கூடங்களை சாடுகின்றனர். இம்மாதிரியான நிகழ்வுகளை தவிர்க்க இளைஞர்கள்
கிடைக்க பெரும் ஒவ்வொரு வாய்ப்புகளையும் நல்வழியில் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

இறுதியாக, நான் கூறிக் கொள்ள விரும்புவது என்னவென்றால், நமது இந்திய இளைஞர்கள் காற்று உள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும், மேலும் பொறுத்தவன் பூமி ஆள்வான் என்பதற்கொப்ப எதுவாக இருப்பினும் தீர ஆலோசித்து பிறகு, சரியான முடிவை தேர்வு செய்து அதனை நடை முறைக்கு கொண்டு வர வேண்டும். நமது நாட்டில் ஐம்பத்து ஆண்டுகள் நாம் அதாவது இந்திய இளைஞர்கள் பல இன்னல்களுக்கு உட்பட்டு இன்று ஓர் அளவிற்கு தலை தூக்க ஆரம்பித்து உள்ளோம் இதனை தொடர்வதற்கு அரசாங்கமும் அரசாங்க சார்பற்ற நிறுவனங்களும் அதோடு பற்பல கழகங்களும் கை கோர்த்து நம் இந்திய இளைஞர்கள் ஒரு புதியதோர் விடி வெள்ளி நிலைமைக்கு கொண்டுச் செல்ல பெரிதும் துணைப்புரிய வேண்டும்.

எதுவாக அமையினும் இவ்வளவு முயற்சிகளுக்கு பிறகும் நமது இளைஞர்கள் தோல்வியை தழுவினார்களே யானால் அதற்கு பிறகும் அத்தோல்விக்கு அவ்விளைஞனே முழு காரணம்.

சிந்தனைத் துளி: வசந்தராவ் அப்பளசாமி
இயற்றியது: கீர்த்தி செல்வராஜூ
(தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி)

வியாழன், 9 அக்டோபர், 2008

அன்பு


‘அன்பு’ மூன்றே எழுத்துக்களால் ஆனது.ஆனால் இப்பூவலகையே இயக்கி கொண்டிருக்கும் ஒரு அற்புதமான ஆயுதம் என்று சொன்னால் அதை மறுப்பார் இல்லை.நட்பு, அருள்,பக்தி என்பது அன்பிற்க்குச் சொல்லப்படும் வேறு விளக்கங்களாகும்.நாம் அன்பிற்க்குப் பல உதாராணங்கள் கொடுக்கலாம்.ஒரு தாய் தன் குழந்தைப் பால் வைத்திருப்பது அன்பு,ஒரு அண்ணன் தன் தம்பி மீது வைத்திருப்பதும் அன்பு, ஒரு பசு தன் கன்று மீது வைத்திருப்பதும் அன்புதான்.நாம் ஒருவர் மீது வைத்திருக்கும் அன்பானது தெய்வமானதாகவும் உண்மையானதாகவும் இருக்க வேண்டும்.நாம் யார் மீது அன்பு வைத்திருக்கிறோம் என்பது முக்கியமல்ல ஆனால்,நாம் வைத்திருக்கும் அன்பானது எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்ப்பார்க்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.



அன்பானவர்களை நீங்கள் பார்த்ததுண்டா?அனைவரும் அன்பானவர்களையே அதிகம் விரும்புவர்.தம் மனதில் உண்மையான அன்பு கொண்டவர்கள் பண்பாகவும் கனிவாகவும் பேசி’ காந்தம் இரும்பைக் கவர்வது போல’ அனைவரையும் தன் வசம் ஈர்ப்பார்கள்.அன்பானவர்கள் தம் உயிரை காட்டிலும் மற்றவர்களின் உயிர் மீது அதிக அக்கறை வைத்திருப்பர்.சிறு உயிரினங்களுக்கும் ஏதாவது துன்பம் நேரிட்டால் ‘ அனலில் இட்டப் புழுப் போல’ துடிதுடிப்பார்கள்.இவர்கள் மனிதர்களையோ அல்லது மிருகங்களையோ வேறுப்படுத்திப் பார்க்கமாட்டர்கள்.


உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை அனைவரும் அறிந்திருப்பீர்.தாஜ்மகாலை ஷாஜகான் என்பவர் தன் ஆசை மனைவியின் இறப்பிற்க்கு பின்னர் கட்டினார்.இது அவர் தன் மனைவியின் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்று ‘உள்ளங்கை நெல்லிக்கனிப் போல’அனைவருக்கும் தெளிவாக தெரிய வைக்கின்றது.அக்காலத்திலே அன்பிற்க்கு இலக்கணமாக திகழ்ந்துள்ளார் ஷாஜகான். ஆனால், இன்றைய நிலமையை நாம் சற்று பின் நோக்கிப்பார்த்தோமேயானால் அது நமக்குப் பெரிய ஏமாற்றத்தையும் வருத்தத்தையுமே முன் வைக்கின்றது.அக்காலத்து மனிதர்களிடையே முன்னேற்றம் ஏதுமில்லாதப் போதும் அன்பானவர்களாகத் திகழ்ந்தார்கள்.ஆனால், இக்காலங்களில் நாம் அடைந்துள்ள வளர்ச்சிக்கு ஈடுக்கொடுத்து ஒவ்வொரு நாளும் ஆங்காங்கே கொலை,கொள்ளை,கற்பழிப்பு போன்றவை நடந்த வண்ணமாகத்தான் உள்ளது.ஏன் இவர்களின் நெஞ்சங்கள் கல்லால் ஆனாதா?இல்லை இவர்களுக்கு அன்பு என்ற சொல்லுக்கே பொருள் தெரியாதா?


‘அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு.’

இது அன்பைப் பற்றி திருவள்ளுவர் எழுதியுள்ள குறள்களில் ஒன்றாகும்.அன்புக் கொண்டு வாழ்பவர்கள்தான் மனிதர்கள் என்றும், அன்பில்லா மனித வாழ்வு உடம்பில் சதையை கொண்ட வாழ்வாகவே முடிந்து விடும் என்கிறார்.அவ்வாறு வாழ்வது வாழ்க்கையே இல்லை என்கிறார்.இதை நாம் என்னாலுமே கடைப்பிடிக்க வேண்டும்.அன்பு இவ்வுலகில் எதையுமே செய்யக்கூடிய சக்தி வாய்ந்தது.


அன்பு படைத்த மனிதர்கள் தெய்வத்திற்க்குச் சமமாகவும் அன்பில்லா மனிதர்கள் மரக்கட்டைகளுக்குச் சமமாகவும் கருதப் படுவர். அன்பின் பாதையில் செல்கின்றவர்கள் என்றுமே வெற்றி அடைவார்கள். தங்களுக்கென்று துன்பம் நேரிடும்போது அனைவரும் தோள் கொடுத்து உதவுவர். நாம் இவ்வுலகில் விடும் கடைசி மூச்சு வரை அன்பின் ஆழத்தை உணர்ந்து புரிந்து வாழ முயற்ச்சிப்போம்.


அன்பே சிவம்!

ஆக்கம்: ரேகா ராஜு
(தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி)

புதன், 8 அக்டோபர், 2008

ஒளி விளக்கு...



வாழ்க்கை என்பது கடலில் செல்லும் படகு. அதில் பிடிமானம் இருந்தால்தான் கரைச் சேர முடியும். அதேபோல் கல்வி இருந்தால் வாழ்வில் முன்னேற முடியும். வாழ்கையை ஒளி வீச வைக்கும் விளக்காக கல்வி திகழ்கின்றது. கல்வி என்பது கல் மாதிரி மிகவும் பலம் வாய்ந்த ஒன்றாகும். கல்வி சவால் நிறைந்த அனைத்திற்கும் துணைப் போல் நின்று துனைப்புரிகின்றது.

கல்வி மனித வாழ்வின் அடிப்படை என்று கூறினால் மிகையாகாது. இவ்வுலகில் பிறந்த அனைத்து ஜீவராசிகளோடு ஒப்பிடும் போது மனிதனே தனித்து காணப்படுகிறான். இதற்கு கடவுள் மனிதனுக்கு மட்டுமே படைத்துள்ள சிந்தனைத் திறனே காரணமாகும். அந்த சிந்தனைத் திறனை நன்முறையில் பயன் படுத்தி பல சாதனைகளைப் படைப்பதற்கு ஊன்றுகோலாக அமைவதே கல்வி ஆகும்.

கல்வி என்பது அமிர்தம் நிறைந்த கடலாகும். எனவே, பிறந்த பலனை முழுமையாக அடைய அக்கடலில் மூழ்கி எழ வேண்டும். கல்வி எல்லையற்றது. அது அமுதச்சுரபி போல் பயன் படுத்த வந்துக் கொண்டேயிருக்கும். "கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு" என்பது இதற்கு ஒரு சான்றாகும்.

வாழ்வில் வெற்றிப் பெற தன்னம்பிக்கையும் மனவுறுதியும் மிக முக்கியம் என்று அறிவியல் பூர்வமாக கண்டு பிடித்துள்ளனர். இவ்விரண்டும் கல்வியினாலே கிடைக்கும் என்பதே சிறப்பான ஒன்றாகும். கல்வி என்ற மூன்று எழுத்து மனிதனின் தலை எழுத்தை நிர்ணயிக்கின்றது என்று தாராளமாக கூறலாம்.

ஆகவே,கல்வி என்பது வாழ்கையை ஒளி வீசும் விளக்காகும். கல்வியினால் சிறந்த விளங்கி நாட்டின் நற்பெயரை உச்சிக்குக் கொண்டு செல்லுதல் ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். இத்தனை உணர்ந்து கல்விக் கற்ற சமுதாயமாக திகள தகுந்த நடவடிக்கைகளை வகுக்க வேண்டும்.

ஆக்கம்: ஷாலினி நடராஜன்
(தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி)

திங்கள், 6 அக்டோபர், 2008

தடுமாறும் இளமையில் காதல்

காதல் என்றால் என்ன? காதல் எப்படிப்பட்டது ? காதல் எவ்வாறு அமைய வேண்டும் ? என்றெல்லாம் இக்காலக்கட்டத்தில் எவருமே அறிந்திருக்க வில்லை, முக்கியமாக நம் இளையோர்கள்! காதல் என்பது நமக்கு ஒருவர் மீது ஏற்படக்கூடிய தூய்மையான, தெய்வீகமான, உன்னதமான, அன்பு பாசம் உணர்வு மற்றும் பிணைப்பு என பல்வேறு வார்த்தைகளால் அடுக்கிக் கொண்டே போகலாம். காதலை எவன் ஒருவன் தன் வாழ்வில் போற்றுகிரானோ அவனே காதலின் மாண்பை அறிந்தவன் ஆவான்.

ஆனால், இன்றைய காலக் கட்டத்தில் காதல் நம்மவர்களுக்கு ஒரு விளையாட்டு பொம்மையாக அமைந்து விட்டது. இப்பொழுது எல்லாம் ஆண்களோ சரி பெண்களோ சரி இவன் இல்லை என்றால் இன்னொருவன் என்றும் இவள் இல்லை என்றால் இன்னொருவள் என்றும் அவர்களின் என்னத்தை மாற்றிக் கொண்டனர். காதலின் முக்கிய அம்சமே ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதை நம் இளையோர்கள் உணர வில்லை. சுருங்கக் கூறின் சில மாதங்களுக்கு ஒரு முறை தங்களின் காதலன் அல்லது காதலியை மாற்றிக் கொள்வது இந்த நவீன நீரோட்டத்தில் இளையோர்களுக்கு ஒரு பொழுதுபோக்காகவே அமைந்து விட்டது. இதற்க்கு காரணம்....??? ஒன்று மேற்கத்திய மோகம் இன்னொன்று சினிமா........ சினிமாவில் எப்படி கதாநாயகன் கதாநாயகியின் அழகைக் கண்டு சில வினாடிகளில் மயங்குகிரானோ அது போலவே தன்னையும் கதாநாயகனாக நினைத்து உடனே காதலில் விழுகிறார்கள். சினிமா காட்சி போல தங்களின் காதலை கடிதம் மூலமும் குறுந் செய்தி மூலமும் வெளிப் படுத்தி கொள்கின்றனர். குறுந் செய்தி மூலமாக வெளிப் படுத்தக் கூடிய விஷயமா காதல்???


தனக்கு தானே எது நல்லது எது கேட்டது என்று முடிவெடுக்க தெரியாத வயதில் காதலிக்க வேண்டியது. சினிமா காட்சி போல காதலியை அழைத்துக் கொண்டு ஊர் சுற்றி விட்டு பெற்றோர்கள் பணத்தில் சில நாட்களுக்கு சந்தோஷமாக இருந்து விட்டு பிறகு பழைய காதலியை விட இன்னும் கொஞ்சம் அழகான பெண்ணை பார்த்தும் பழைய காதலியைக் கை விட்டு விடுவதே இக்கால ilaiyorgalin வேலையாகும். இதை விடக் கொடுமை அப்பெண்ணும் ஒருவன் தன்னை விட்டுசென்றதும் வேறொருவனுடன் ஊர் சுற்றுவதே ஆகும். மாற்றி மாற்றி காதலிக்க காதல் என்ன ஆடிய இளையோர்களே?

ஆகவே, ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி சினிமாவைப் பார்த்து காதலை இழிவு படுத்தக் கூடாது. சினிமா மூன்று மணி நேரமே! ஆனால் வாழ்கை? யோசித்து பாருங்கள், சினிமா காட்சிகள் வாழ்கையின் நடை முறைக்கு ஒத்து வராத ஒரு விஷயம். சினிமாவிலும் நல்ல காட்சிகளை காதலுக்க்காகவே படைத்துக் காட்டுகிறார்கள். காதலை அடைய என்ன பிரச்சனை நேர்ந்தாலும் போராடி அதை அடைய வேண்டும். ஆனால், இன்று காதலுக்காக போராடுகிறவர்களை யாரும் உதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை, காதல் பெயரை சொல்லி தற்கொலை செய்து கொள்பவர்களை பார்த்து தற்காலத்தில் தற்கொலை செய்து கொள்ளும் கோழையான இள காதலர்கள் இன்னும் கூட இருந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

எனவே, இளையோர்களே காதல் என்பது நமக்கு ஒரு நல்ல வாழ்க்கைத் துணையை ஏற்படுத்திக் கொள்வதில் உதவும். இள வயதில் காதலிப்பது தவறல்ல, அக்காதல் உண்மையானதா? நிலைத்து நிற்கக் கூடியதா? அக்காதல் பக்குவப் பட்டதா? என சிந்தித்து செயல் பட வேண்டும். இள காதலர்களே சிந்தியுங்கள் பல முறை சிறந்த முடிவுக்காக.......!

"காதல் ஒன்றும் முக அழகைக் கண்டும் உடல் அழகைக் கண்டும்
வருவதில்லை அது அக அழகைக் கண்டு பூ பூப்பதாகும்"

ஆக்கம்: திலகவதி திருமலை
(தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி)

வியாழன், 2 அக்டோபர், 2008

புரியாத புதிர்

கடந்து வந்த பாதையில் உன் நினைவுகள் என்னை மீண்டும் வருடச்செய்கின்றது.

உனக்காக நான் காத்திருக்கும் அந்த நொடிகள் உன் நiனைவை விட்டு நீங்கிவிட்டதா?

பார்க்கும் ஒவ்வொரு திசையும் உந்தன் முகம் என்னை தேடவைக்கின்றது.

இதயமே, நீ இல்லாத அந்த சிறு கனமும் என் உயிர் உனக்காக ஏங்குகின்றது.

உன் உயிராய் என்னை ஏற்றுக் கொள்ளும் நாளுக்காக என்றும் காத்திருப்பேன் என் ஆறுயிரே…

என்றும் ஏக்கத்துடன் உந்தன் ???????????

ஆக்கம்: யோகேஸ்வரி தனபால்
(தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி)