புதன், 26 நவம்பர், 2008

கைத்தொலைபேசி:அவசியமா, அனாவசியமா?


இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் மனிதர்கள் தத்தம் அன்றாட வாழ்க்கையில் பல புதிய சாதனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இப்படிப்பட்ட பொருள்கள் நமது நேரத்தைச் சேமிக்கின்றதென சிலர் கூறுகின்றனர். மேலும் சிலர், இந்தக் கருத்தை மறுத்துத் தற்கால சாதனங்கள் மனித குலத்தின் மத்தயில் சோம்பல் குணத்தை வளர்க்கின்றன என்றும் கூறியுள்ளனர். எது எப்படி இருப்பினும், இன்றுவரை மனிதர்களுக்கு உதவியாகவும் அதற்கு மாறாக அபாயகரமாக விளங்குவதும் கைத்தொலைபேசி என்றே கூறலாம்.

ஒரு கைத்தொலைபேசியின் மூலம் நாம் ஒரு தகவலை மிகவும் சுலபமாக மற்றொருவரிடம் சேர்த்துவிடலாம். அவர் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் கைத்தொலைபேசியைப் பயன்படுத்தி அந்தத் தகவலைத் தேவையானவரிடம் சேர்த்துவிடலாம். கூற வேண்டிய தகவலை நம்மால் கூற முடியாமல் போனாலும் குறுந்தகவல்(S.M.S) என்ற எளிய முறையில் நாம் அந்தத் தகவலைச் சேர்த்துவிடலாம். இந்த முறை தற்பொழுது இளைஞர்களின் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகின்றது. ஒருவரிடம் அழைத்துப் பேசுவதைத் தவிர்த்து, இவ்வாறு செய்வதால் பணமும் சிக்கனப் படுத்த முடியும். தற்கால கைத்தொலைபேசிகளில் உள்ள சில தொழில் நுட்ப விஷயங்கள் பலரை பிரமிக்க வைக்கின்றது என்று சொன்னால் அது மிகையாகாது. படம் பிடிக்கும் வசதி, செவிக்கு இனிய கானங்கள் கேட்பதற்கும், ஏன் இணையத்தை வலம் வர கூட வாய்ப்பு தந்திருக்கின்றது கைத்தொலைபேசி.

எது எப்படி இருந்தாலும், கைத்தொலைபேசி சில நேரங்களில் அனாவசியமாகவும் தோற்றமளிக்கின்றது . தொலைப்பேசியின் கட்டணம் கட்டப்படாமல் இருந்தாலோ அல்லது கைத்தொலைபேசியில் போதிய பணத்தொகை இல்லாமல் போனாலும் நாம் ஒருவரை தொடர்பு கொள்ள முடியாது. ஏன்,ஒரு குறுந்தகவல் கூட அனுப்ப முடியாது. சிலர், கைத்தொலைபேசியைத் தொல்லைபேசியாக மாற்றுகின்றனர். பொது இடங்களிலும், பள்ளிகளிலும், கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு கைத்தொலைபேசியின் பயன்பாட்டினால் புற்றுநோய் வரக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது எனக் கண்டறியப்பட்டு கூறப்பட்டாலும், அது நிருபனமாக்கப்படவில்லை. மேலும், கைத்தொலைபேசியின் தொடர்பு அலை மருத்துவமனைகளில் உள்ள சில கருவிகளின் வாசிப்பைத் தவறுதலாகத் தருவதால், நோயாளிகளுக்கு அபாயகரமான விளைவுகளை விளைவிக்கக்கூடும் என்றும் கூறப்படுகின்றது.

ஆகவே, கைத்தொலைபேசியின் பயன்பாடு மனிதர்களுக்கு நன்மையும் அளிக்கின்றது, தீமையும் அளிக்கின்றது என்றே கூற வேண்டும். குறிப்பாக, மாணவர்களாகிய நாம் கீழ்க்காணும் விதிகளைக் கடைப்பிடித்தால் அனைவருக்கும் நன்மையே:
1. கருத்தரங்கிலோ அல்லது கூட்டத்திலோ கலந்து கொள்ளும்போது கைத்தொலைபேசியின் ஒளியை அமைதி நிலையில் () வைக்கவும் அல்லது அடைத்து விடவும்.
2. பலர் இருக்கும் இடத்தில் தொலைபேசியில் உரையாடும்போது குரலைத் தாழ்த்திப் பேச வேண்டும்.
3. முக்கியமான அழைப்பு கிடைத்தால், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குச் சென்று பேசலாம்.
4. குறுந்தகவல் அனுப்புவதைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
5. கைத்தொலைபேசியை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். பாட நேரத்திலோ அல்லது கலந்துரையாடலின் போதோ பயன்படுத்துவது நமது கல்விக்கும் பணத்துக்கும் கேடு என்றால் அது மிகையாகாது.

ஆக்கம்:

கலையமுதன் ரவீந்திரன்
தெமேங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி

சனி, 22 நவம்பர், 2008

காலம் பொன்னானது

அன்புள்ள மாணவமணிகளுக்கு எனது முத்தான வணக்கங்கள். இது விடுமுறை காலம். உங்களில் பலர் பி.எம்.ஆர் சோதனையை முடித்துவிட்டு வீட்டில் அமர்ந்திருப்பீர்கள். இன்னும் பலர் எஸ்.பி.எம்., எஸ்.டி.பி.எம். தேர்வுகளை எதிர் கொண்டு ஆயத்தம் செய்து கொண்டிருப்பீர்கள்.உங்கள் அனைவருக்கும் ஒரு செய்தி. வாழ்க்கையில் நாம் சில பொக்கிஷங்களை இழந்துவிட்டால் அதனை மீண்டும் மீட்ட முடியாது.

அதில் ஒன்றுதான் நேரம். அதனைத் தயவு செய்து இழந்துவிடாதீர்கள்.ஒவ்வொரு நிமிடமும் உங்கள் வாழ்க்கையை மாற்றக் கூடிய வல்லமைக் கொண்டது. நேரம் என்பது உயிரைப் போன்றது. ஏன் அதைவிட மதிப்பில் உயர்ந்தது என்றுகூட சொல்லலாம். பணத்தால் கூட அதனை நம்மால் மீட்ட முடியாது. ஹாரவி மேகை என்ற ஒரு வெளிநாட்டவர் நேரத்தை பற்றி ஒரு சில வரிகளில் கூறியுள்ளார். இதோ அது உங்களுக்காக

நேரம் இலவசம், ஆனால், அதை நீங்கள் உங்களின்
சொத்தாக ஆக்க முடியாது,
ஆனால் நீங்கள் அதனைப் பயன்படுத்தலாம்,
நேரத்தை நீங்கள் வைத்துக்கொள்ள முடியாது,
ஆனால் நீங்கள் அதை நல் முறையில் செலவழிக்கலாம்,
அதை நீங்கள் தொலைத்துவிட்டால், மீண்டும் பெறமுடியாது


ஆக்கம்:
கலையமுதன் ரவீந்திரன்

தெமேங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி

செவ்வாய், 11 நவம்பர், 2008

உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்

உடல் ஊனமுற்ற இவரால் சாதிக்கும் பொழுது நம்மால் நிச்சயம் இயலும்..

எஸ்.பி.எம் தேர்வை எழுதவிருக்கும் மாணவர்களுக்கு முதலில் தெமேங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கழகத்தின் தமிழ் மாணவர்களாகிய எங்களின் வாழ்த்துகள். எஸ்.பி.எம் என்ற ஒரு நிலையை அடைந்த உங்களுக்கு மற்றுமொரு வாழ்த்துகள். உங்கள் வாழ்கையை முடிவெடுக்கும் ஒரு நிலைக்கு நீங்கள் வந்துவிட்டீர்கள். இந்தத் தேர்வு உங்களின் வாழ்க்கை இலட்சியத்தை அடைவதற்கு ஒரு முக்கியமான படி. ஏறுங்கள் மாணவர்களே! வாழ்கையின் வெற்றிப்படியின் உச்சத்திற்குச் சென்று வெற்றிக்கனியைப் பறிக்கச் செல்லுங்கள்!

பெற்றோர்கள் தத்தம் அன்புச் செல்வங்களுக்கு ஒரு பக்கபலமாக இருக்க வேண்டுமே தவிர ஒரு பயமாக இருக்கக் கூடாது. பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகள் சிறப்பான முடிவை எடுக்காவிடில், அவர்களைத் தயவு செய்து வசை பாடாதீர்கள். அவர்களின் முயற்சிக்குப் பாராட்டுத் தெரிவித்து அவர்களுக்கு ஊக்கம் தாருங்கள். அரசாங்கம் சார்ந்த இயக்கங்களும் சார்பற்ற இயக்கங்களும் சிறந்த முடிவுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கம் தருவதோடு, சிறந்த முடிவைப் பெறாத மாணவர்களைக் கை கழுவி விட வேண்டாம். எது எப்படி இருந்தாலும், இந்த வருட எஸ்.பி.எம் தேர்வில் இந்திய மாணவர்கள் நிச்சயமாக ஒரு புதிய சாதனையைப் படைக்க முடியும்.......

உனக்கு என்ன வேண்டும் என்று நினைத்தால் அதனை நீ சாதிக்கலாம்!
அதற்கு எதிர்மாறானவன் நீ என்று உன்னைக் காட்டிக் கொள்ளாதே!

ஆக்கம்:
கலையமுதன் ரவீந்திரன்

தெமேங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி

ஞாயிறு, 9 நவம்பர், 2008

தீர்ப்பு நமது கையில்....

ஒவ்வொரு வருடமும் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான சோதனை அதாவது யூ.பி.எஸ்.ஆர் தேர்வு தவறாமல் இடம் பெறுகின்றது. இந்த வருடம் சற்று மாறு பட்ட அம்சத்தில் கணிதமும் அறிவியலும் ஆங்கில மொழியில் போதிக்க பட்டு சோதனையும் நடத்தப்பட்டது. யூ.பி.எஸ்.ஆர் தேர்வுக்கான முடிவுகள் பதின்மூன்றாம் திகதி நவம்பர் மாதம் வெளியேற்ற உள்ளதாக தகவல் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பெற்றோர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்கள் செல்வங்களின் முடிவுகளை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் அவா என்ன ஆகும்?


ஆங்கில மொழியில் கணிதமும் அறிவியலும் போதிக்க படுவது சரியா தவறா என்று விவாதிக்க இது தக்க தருணம் அல்ல, இருப்பினும் வரப்போகும் தீர்ப்புகள் நல்ல தீர்வை காணுமா? அல்லது........? ஆங்கில மொழியில் அறிவியலும் கணிதமும் கற்று தரப்படுவது உகந்ததா இல்லையா என்பதை யூ.பி.எஸ்.ஆர் முடிவுகள் நிர்ணயிக்கும். இடை நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில மொழியில் கணிதமும் அறிவியலும் கற்று தரப்படுவது சரியாக அமைந்தாலும் தொடக்க பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில மொழியை விட தாய் மொழியில் கற்று தர படுவதே சிறப்பாக அமையும்.

அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பது போலவே காரணமின்றி எந்த ஒரு சிந்தனையும் தோன்றாது. அதாவது ஆங்கில மொழியில் கற்று தர படுவதால் நன்மைகள் உண்டு இல்லை என்று நான் சொல்ல வில்லை ஆனால், அப்படி ஆங்கில மொழியில் கணிதமும் அறிவியலும் கற்று தர படுவதால் நமது தாய் மொழியின் சிறப்பு குறைக்கபடுவதாக தோன்றுகின்றது. மேலும், தாய் மொழியை சரி வர கற்காமல் பிற மொழியில் கற்பதால் தாய் மொழியின் முழு கூறுகளையும் அறிந்து கொள்ள இயலாது. இதைத்தவிர்த்து நமது தாய் மொழியின் அடையாளத்தை நாமே அளித்துக் கொள்ளலாமா?

சுருங்கக் கூறின், தொடக்கப்பள்ளியில் ஆங்கில மொழியில் கணிதமும் அறிவியலும் கற்று தருவதை விட இடை பள்ளியில் தாரளமாக கற்று தரலாம். மேலும் இன்னும் சில நாட்களில் வெளிவர இருக்கும் யூ.பி.எஸ்.ஆர் தேர்விற்கான முடிவை அற ஆவலாக உள்ளோம். நம்மை தவிர்த்து பெற்றோர்கள்,அரசாங்க நிர்வாகங்கள், அரசாங்க சார்பற்ற அமைப்புகள்,அதோடு எழுத்தாளர்கள் ஆகிய அனைவருமே மிகுந்த ஆவலுடன் விமர்சனம் செய்ய காத்துக் கொண்டிருக்கின்றனர்.

நல்லதே எண்ணுவோம்,நல்லதே செய்வோம்,நல்லதே நடக்கும்..!

ஆக்கம்:கீர்த்தி செல்வராஜு
தெமேங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி

செவ்வாய், 4 நவம்பர், 2008

உண்மை அன்பு எங்கே…இதோ பாருங்கள்…

ஞானி ஒருவர் கூறுகிறார், “வானத்தைப் பிழிந்து மழையாக்குவதும், மழையை வானமாக்குவதும் எனக்குச் சுலபம். ஆனால், என் சக்தியை நிரூபிக்க அது மட்டும் போதாது…உண்மையான சக்தி அன்பு”.

அன்பினால் மட்டுமே ஒரு மனதைத் தொடவும் மனதின் தன்மையை மாற்றவும் முடியும்! “அன்பே சிவம்”, “சிவமே அன்பு” கடவுளை நம்புகின்றவருக்குக் கடவுளே அன்பு. நாத்திகருக்கு அன்பே கடவுள். இதிலிருந்து மீள்பவர் எவருமிலர். திருமந்திரத்தில் திருமூலர் இதையே அழகாய் பாடியும் உள்ளார்,

“ அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.”

இறைவனது தோற்றம் மங்களகரமானது. இருப்பிடமும் மங்களகரம். அன்பை நுகருபவர் இறைவனை அடையும் வழியை எளிதில் பெறுவர்.

கொடுப்பதும் மன்னிப்பதும் அன்பு; பெறுவதும் மறப்பதும் வாழ்க்கை.

Love lives by giving and forgiving; self lives by getting and forgetting.

நல்லவராய் இருப்போம்; நல்லதே செய்வோம் (be good, do good) நமக்கும் நல்லதே நடக்கும்!

உண்மை அன்பில் இறைவன் குடிகொண்டுள்ளான் என்பதை நாம் உணர வேண்டும். இறைவனை தேடி அலையாதீர். அவன் உங்களிடமுள்ள அன்பில் இருக்கிறான். அன்பை அனைவரிடத்திலும் செலுத்துங்கள், இறைவன் உங்களை அவன் அருளால் அணைப்பான். உங்களை வெறுப்பவர்களை நீங்கள் விரும்புங்கள், உங்களை விரும்புகிறவர்களை ஒரு போதும் வெறுக்காதீர்!

இதோ கள்ளங்கபடமற்ற அன்பைப் பொழியும் இந்த மழலைகளிடத்திலும் அவன் இருக்கிறான்…


உண்மை அன்பைப் பார்த்தீர்களா?!


என்றென்றும் அன்புடன்,
மலர்விழி சுப்ரமணியம்

சனி, 1 நவம்பர், 2008

உறவு


உறவு என்ன நீ அடித்து விளையாடும் பூப்பந்தா?
நீ வா என்று அழைக்கும் பொழுது வரவும்...
போ என்று துரத்தும் பொழுது போகவும்...
நான் என்ன உணர்வற்ற பிணமா?
உந்தன் அன்பை உண்மை என்று எண்ணி என் வாழ்வில் தோற்றுவிட்டேன்....
என் பாசத்திற்குரியவரே! அன்பை புறக்கணிக்காதே காரணம் நீ இன்னல்படும் நேரம்
உன்னை தேடிவருவது உந்தன் பணம் அல்ல உண்மையான பாசம்...
இந்த பிரிவு நிரந்தரம் அல்ல...
எனது பந்தம் தொடரும்...
உன்னை இழந்து தவிக்கும் சின்ன இதயம்

ஆக்கம் :யோகேஸ்வரி தனபால்
தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி