புதன், 26 நவம்பர், 2008

கைத்தொலைபேசி:அவசியமா, அனாவசியமா?


இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் மனிதர்கள் தத்தம் அன்றாட வாழ்க்கையில் பல புதிய சாதனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இப்படிப்பட்ட பொருள்கள் நமது நேரத்தைச் சேமிக்கின்றதென சிலர் கூறுகின்றனர். மேலும் சிலர், இந்தக் கருத்தை மறுத்துத் தற்கால சாதனங்கள் மனித குலத்தின் மத்தயில் சோம்பல் குணத்தை வளர்க்கின்றன என்றும் கூறியுள்ளனர். எது எப்படி இருப்பினும், இன்றுவரை மனிதர்களுக்கு உதவியாகவும் அதற்கு மாறாக அபாயகரமாக விளங்குவதும் கைத்தொலைபேசி என்றே கூறலாம்.

ஒரு கைத்தொலைபேசியின் மூலம் நாம் ஒரு தகவலை மிகவும் சுலபமாக மற்றொருவரிடம் சேர்த்துவிடலாம். அவர் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் கைத்தொலைபேசியைப் பயன்படுத்தி அந்தத் தகவலைத் தேவையானவரிடம் சேர்த்துவிடலாம். கூற வேண்டிய தகவலை நம்மால் கூற முடியாமல் போனாலும் குறுந்தகவல்(S.M.S) என்ற எளிய முறையில் நாம் அந்தத் தகவலைச் சேர்த்துவிடலாம். இந்த முறை தற்பொழுது இளைஞர்களின் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகின்றது. ஒருவரிடம் அழைத்துப் பேசுவதைத் தவிர்த்து, இவ்வாறு செய்வதால் பணமும் சிக்கனப் படுத்த முடியும். தற்கால கைத்தொலைபேசிகளில் உள்ள சில தொழில் நுட்ப விஷயங்கள் பலரை பிரமிக்க வைக்கின்றது என்று சொன்னால் அது மிகையாகாது. படம் பிடிக்கும் வசதி, செவிக்கு இனிய கானங்கள் கேட்பதற்கும், ஏன் இணையத்தை வலம் வர கூட வாய்ப்பு தந்திருக்கின்றது கைத்தொலைபேசி.

எது எப்படி இருந்தாலும், கைத்தொலைபேசி சில நேரங்களில் அனாவசியமாகவும் தோற்றமளிக்கின்றது . தொலைப்பேசியின் கட்டணம் கட்டப்படாமல் இருந்தாலோ அல்லது கைத்தொலைபேசியில் போதிய பணத்தொகை இல்லாமல் போனாலும் நாம் ஒருவரை தொடர்பு கொள்ள முடியாது. ஏன்,ஒரு குறுந்தகவல் கூட அனுப்ப முடியாது. சிலர், கைத்தொலைபேசியைத் தொல்லைபேசியாக மாற்றுகின்றனர். பொது இடங்களிலும், பள்ளிகளிலும், கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு கைத்தொலைபேசியின் பயன்பாட்டினால் புற்றுநோய் வரக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது எனக் கண்டறியப்பட்டு கூறப்பட்டாலும், அது நிருபனமாக்கப்படவில்லை. மேலும், கைத்தொலைபேசியின் தொடர்பு அலை மருத்துவமனைகளில் உள்ள சில கருவிகளின் வாசிப்பைத் தவறுதலாகத் தருவதால், நோயாளிகளுக்கு அபாயகரமான விளைவுகளை விளைவிக்கக்கூடும் என்றும் கூறப்படுகின்றது.

ஆகவே, கைத்தொலைபேசியின் பயன்பாடு மனிதர்களுக்கு நன்மையும் அளிக்கின்றது, தீமையும் அளிக்கின்றது என்றே கூற வேண்டும். குறிப்பாக, மாணவர்களாகிய நாம் கீழ்க்காணும் விதிகளைக் கடைப்பிடித்தால் அனைவருக்கும் நன்மையே:
1. கருத்தரங்கிலோ அல்லது கூட்டத்திலோ கலந்து கொள்ளும்போது கைத்தொலைபேசியின் ஒளியை அமைதி நிலையில் () வைக்கவும் அல்லது அடைத்து விடவும்.
2. பலர் இருக்கும் இடத்தில் தொலைபேசியில் உரையாடும்போது குரலைத் தாழ்த்திப் பேச வேண்டும்.
3. முக்கியமான அழைப்பு கிடைத்தால், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குச் சென்று பேசலாம்.
4. குறுந்தகவல் அனுப்புவதைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
5. கைத்தொலைபேசியை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். பாட நேரத்திலோ அல்லது கலந்துரையாடலின் போதோ பயன்படுத்துவது நமது கல்விக்கும் பணத்துக்கும் கேடு என்றால் அது மிகையாகாது.

ஆக்கம்:

கலையமுதன் ரவீந்திரன்
தெமேங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி

2 கருத்துகள்:

priyamudanprabu சொன்னது…

////
ஆகவே, கைத்தொலைபேசியின் பயன்பாடு மனிதர்களுக்கு நன்மையும் அளிக்கின்றது, தீமையும் அளிக்கின்றது என்றே கூற வேண்டும்.
/////

சரியா சொன்னீங்க(நாட்டாமை)

பெயரில்லா சொன்னது…

Very good